வல்வை பிரான்ஸ் என்பது, இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண தீபகற்பகத்தின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள, நகரசபையால் நிர்வகிக்கப்படும், தமிழர்களாகிய இந்துக்களை பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவர்களை சிறுபான்மையாகவும் கொண்ட ஒரு பழைய நகரமாகும். வல்வை பிரான்ஸ் என்பது உலகம் முழுவதும் இருக்கும் வல்வை மக்களுக்காக இலங்கையில் இருந்து செய்திகளை உடனடியாக கிடைக்க வழி வகுக்கிறது .
திரு.வயித்தியலிங்கப்பிள்ளை புலவர் அவர்கள் வல்வையின் குறிப்பிடத்தக்க முதலாவது அடையாளமாவார்.
வல்வெட்டிதுறையானது திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த இடமென்பது வெளிப்படையானவொன்று. மேலும் ரெலோ (TELO) ஸ்தாபகர்களான திரு.தங்கத்துரை, திரு.குட்டிமணி ஆகியோர்களும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர்களின் ஒருவரான திரு.ஞானமூர்த்தி அவர்களும் வல்வெட்டித்துறைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.துரைரத்தினம் மற்றும் திரு.M .K சிவாஜிலிங்கம் ஆகியோர் வல்வெட்டித்துறையில் இருந்து இதுவரை இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவான இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.
இலங்கையின் வடகோடியில் வல்வெட்டித்துறை அமைந்திருப்பதால், வல்வெட்டித்துறையானது பாக்கு நீரிணையையும், தமிழ் நாட்டின் தென்கோடியையும், தன் அருகாமையில் கொண்டு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
வல்வெட்டித்துறைச் சேர்ந்த ஆழிக்குமரன் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.விவேகானந்தன் ஆனந்தன் அவர்கள் பாக்கு நீரிணையை இருவழி கடந்து (தலைமன்னார் – தனுஸ்கோடி – தலைமன்னார்) சாதனை படைத்திருந்தார். தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு.முருகுப்பிள்ளை நவரத்னசாமி (நீச்சல் வீரன் நவரத்னசாமி) அவர்கள் 1954 ஆம் ஆண்டிலே பாக்கு நீரிணையை 28 மணி நேரத்தில் ஒருவழி கடந்து சாதனை படைத்திருந்தவர் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்துத்துவத்தை மிகச் சிறப்பாகவும், இறுக்கமாகவும் கடைபிடிக்கும் வல்வையின் பெரிய ஆலயங்களில் ஒன்றான வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் தீர்த்தத் திருவிழா அன்று நிகழும் ‘இந்திரவிழா’ இலங்கையில் மிகப் பிரசித்தமானதும் அதிக பொருட்செலவிலும் எடுக்கப்படும் ஒரு விழாவாகும்.
தனக்கென பல சிறப்பியல்புகளைக் கொண்ட வல்வெட்டித்துறையானது, அன்றும் இன்றும் பல கப்பற்துறை சார்ந்தவர்களை தொடர்ந்தும் தன்னகத்தே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
